போலி ஆவணம் மூலம் வேலை பெற முயற்சி: ஆவணங்களை சரிபார்க்க உத்தரவு! - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: போலி ஆவணம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் வேலை பெற முயற்சி நடைபெற்றது தெரியவந்ததையடுத்து ஆவணங்களைச் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அவர்களில் பள்ளிக் கல்வித் துறையில் பணியிடங்களைத் தேர்வுசெய்தவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்கள் பணியில் சேர சென்றபோது போலி ஆவணத்தின் மூலம் பணியில் சேர வந்துள்ளது கண்டறியப்பட்டது.
அதனைத் தாெடர்ந்து அனைத்துப் பணியாளர்களின் சான்றிதழ்களையும் சரிபார்த்து பணியில் சேர்க்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் நியமனம் பெற்ற 633 பேரின் விவரங்களைச் சரிபார்க்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலந்தாய்வுக்கு முன்னதாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 644 பேர் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் 633 பேருக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முறைகேட்டில் ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொடர்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.