சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004-ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் எழுந்தது.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018-ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அலுவலர்களின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
உண்மை கண்டறியும் குழு அமைப்பு:இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிலை மாயமானது குறித்து விசாரிக்கும் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையையும் ஆறு வார காலத்திற்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்து மார்ச் 30-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.