தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெ. போயஸ் இல்ல வழக்கு: டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி! - Chennai District News

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடைவிதிக்கக்கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Jun 8, 2020, 12:15 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசு சமீபத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடைவிதிக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்

அதில், ”ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் போயஸ் தோட்ட இல்லத்தில் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தற்போது அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல்.

மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித்துறையினர் அதில் ஒரு பகுதியை சீல்வைத்துள்ளனர். சோதனையின் அடிப்படையில் வருமான வரித்துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

இதுதவிர ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. அந்த விசாரணையும் முடிவடையவில்லை.

பல விசாரணைகள் சம்பந்தப்பட்ட அந்த வீட்டை அரசு செலவில் நினைவில்லமாக மாற்ற முடியாது. வீட்டை நினைவிடமாக மாற்ற அதே பகுதியைச் சேர்ந்த 108 பேர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு காணொலிக் காட்சி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது, போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்கும்படி கோரிய வழக்கை எப்படி விசாரணைக்கு ஏற்க முடியும். ஆனால் இந்த வழக்கு முறையாக தாக்கல்செய்யப்படவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை திரும்பப் பெற டிராபிக் ராமசாமி தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள் வழக்கைத் திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details