தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தியாவில் தினமும் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டும்' - திருநாவுக்கரசர் எம்.பி.

இந்தியாவில் தினமும் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தினால் தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என திருநாவுக்கரசர் எம்.பி., கூறினார்.

trichy-mp-thirunavukarasar-gh-inspection
trichy-mp-thirunavukarasar-gh-inspection

By

Published : Jun 12, 2021, 7:25 AM IST

திருச்சி : தலைமை அரசு மருத்துவமனையில் திருநாவுக்கரசர் எம்.பி., ஆய்வு செய்தார்.

திருச்சியில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் வசதிகள், படுக்கைகள், மருத்துவமனை அடிப்படை வசதிகள் குறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் திருநாவுக்கரசர் எம்.பி., ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு 40 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதில் நடந்து வரும் பணிகள் குறித்து தற்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் 39 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரம் படுக்கைகள் இங்கு உள்ளன. இதில் சுமார் 600 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 400 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

படுக்கை காலியாக இருப்பது கரோனா தொற்று குறைந்து வருவதைக் காட்டுகிறது. இது நல்ல அறிகுறி. இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கும், மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்கும் தடுப்பூசி ஒன்றுதான் ஒரேவழி.

முன்பு மக்கள் அச்சம் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தனர். தற்போது பயம் தெளிந்து மக்கள் ஊசி போட முன்வந்துள்ளனர். இதன் காரணமாக தடுப்பபூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுடன் பேசி அதிக அளவில் தடுப்பூசிகளை வாங்கி வருகிறது. தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலை நீடித்தால் முழுமையாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க 3 ஆண்டுகள் ஆகும்.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற பெரிய நாட்டில் தினமும் ஒரு கோடி பேரை இலக்காகக் கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும். அப்போதுதான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.

தலைமை அரசு மருத்துவமனையில் திருநாவுக்கரசர் எம்.பி ஆய்வு

வெளிநாடுகளில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறை வந்துவிட்டது. ஆனால் நாம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இன்னும் முழுமையாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளது.

அதனால் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். விதிகளை பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: பரிகார பூஜை எனும் பெயரில் நூதன முறையில் நகை திருடியவருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details