சென்னை:பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கூட்டு அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபௌண்டேஷன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில், தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃபிரண்ட் உள்ளிட்ட எட்டு அமைப்புகள் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
குறிப்பாக குடியுரிமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கட்டாய மதமாற்றங்கள், முஸ்லீம் இளைஞர்களிடையே தீவிரவாத உணர்வைத் தூண்டுதல், தீவிரவாத இயக்கங்களுக்காக பண மோசடியில் ஈடுபட்டு நிதி திரட்டுதல் மற்றும் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி ஆள் சேர்த்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் கூட்டு அமைப்புகள் மீது முன்வைக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உட்பட எட்டு அமைப்புகளை உபா சட்ட விதிகளின் கீழ் 5 ஆண்டுகளுக்கு செயல்பட தடை விதித்து கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. உபா சட்ட விதிகளின் கீழ் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளோ செயல்படத் தடை விதிக்கப்பட்டால் அந்த முடிவுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதா? இல்லையா? என்பதை விசாரணை செய்ய மத்திய அரசு மூலம் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை தீர்ப்பாயத்திற்கு தலைமை தாங்க நியமிக்குமாறு சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்படும். பின்னர் சட்ட அமைச்சகம் மூலம் சம்மந்தப்பட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பரிந்துரைக்கப்படும். அதன் மூலம் தீர்ப்பாயத்தின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார்.