சென்னை:ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகக் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, பாட்டாளி, பி.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்குத் தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பால் கிதியோன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், எட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், பொது மக்களின் நடமாட்டத்துக்கும், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சுமூகமாக செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என அவரது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்பட்டது. சுமார் 7 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காமல் புதிய கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க விதிகளின் படி, ஊழியர்கள் போராட்டம் நடத்த அடிப்படை உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.
நேற்று (ஜன.09) அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இன்று (ஜன.10) போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என ஊழியர்களிடம் சங்கங்கள் கடுமையாக நடந்து கொள்கின்றன. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தீர்வு காணப்படும் என அரசு உறுதி அளித்த பின்பும் போராட்டத்தைக் கையில் ஊழியர்கள் எடுத்துள்ளனர் என தெரிவித்தார்.
5 சதவிகித அகவிலைப்படி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால், வேலைக்குத் திரும்ப உத்தரவிட வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.