தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜன.9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு! - Transport union strike

Transport Association Protest: சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 6:46 PM IST

Updated : Jan 3, 2024, 10:10 PM IST

சென்னை:போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

முன்னதாக, போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து சிஐடியூ, ஏஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 30 தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக் கழக தொழிற்சங்சம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இடையே இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில், “ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் தமிழக அரசு தரப்பில் இருந்து, மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பேசி தீர்வு காணலாம் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதில் முக்கிய கோரிக்கையான, ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு பஞ்சப்படியை வழங்கும் விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது. மேலும், கோரிக்கைகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் நேரம் கேட்பது எங்களை ஏமாற்றுவதாக உள்ளது.

ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக எதுவும் வழங்கவில்லை, இது எங்கள் அடிப்படை உரிமை. மேலும், முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும்” என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், “தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், தைத்திருநாளைக் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத்தீர்வு காண வேண்டும்” என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுகள் தோல்வியடைந்துவிட்ட நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுகளை அடுத்த ஓரிரு நாட்களில் அரசு நடத்த வேண்டும். அந்தப் பேச்சுகளில் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் போக்குவரத்து அமைச்சரே பங்கேற்க வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

மேலும், “ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து பிரச்சினைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

எனவே போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை கருத்தில் கொண்டு போராட்ட அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன்” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னதாக வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:“அமலாக்கத்துறை அதிகாரிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க” - வலுக்கும் கண்டனங்கள்!

Last Updated : Jan 3, 2024, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details