சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வருகின்ற வகையில் போக்குவரத்து துறையின் சார்பில் பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதன்படி, சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களில் இருந்தும் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று பெருமளவு குறைந்துள்ளதால், பேருந்துகளில் 100 விழுக்காடு பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கட்டாயம் முகக்கவசம், வெப்பமானி மூலம் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு செயல்படுத்தியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பண்டிகைக்கு பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இதனை பயணிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 11 முதல் 14ஆம் தேதிகளில் காலை 6 மணி வரையில் சென்னையிலிருந்து 10 ஆயிரத்து 276 பேருந்துகள் இயக்கப்பட்டு 5 லட்சத்து, 6 ஆயிரத்து, 712 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
நாளைய தேதிவரையில் 1 லட்சத்து, 22 ஆயிரத்து, 600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையிலிருந்து 45 ஆயிரத்து, 275 பயணிகளும் பிற ஊர்களில் இருந்து 77 ஆயிரத்து, 325 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கு 5 கோடியே 46 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும் பிற பகுதிகளில் இருந்து மற்ற ஊர்களுக்கும் சென்று உள்ள பயணிகள் திரும்பிட ஏதுவாக வரும் 17 முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு ஒன்பதாயிரத்து, 543 பேருந்துகளும் சென்னையை தவிர்த்து மற்ற பிற இடங்களுக்கு 5,727 பேருந்துகளும் என மொத்தம் 15, 270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.