சென்னை: தலைநகர் சென்னையில் 625 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 436 அரசுப்பேருந்துகள், மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினசரி சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
மேலும் பெண்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்புச் சலுகை, மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு, சென்னை பஸ் ஆப் செயலி, பேருந்துகளில் ஒலிப்பெருக்கி என மக்களுக்கு பயன் தரக்கூடிய பல திட்டங்களையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தற்போது தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது இயங்கி வரும் மாநகர் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதி வழங்கப்பட தனியார் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் இந்த தனியார் பேருந்துகள் இயக்கும் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 500 பேருந்துகளையும், 2025ஆம் ஆண்டு 500 பேருந்துகளையும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் இந்த திட்டத்திற்கு பல்வேறு போக்குவரத்துக் கழக சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும் மும்பை போன்ற மாநிலங்களில் இதே போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வளர்ந்து வரும் சென்னை நகரின் தேவையை ஈடு செய்யும் வகையில் தனியார் பேருந்துகளை இயக்கப்போவதாக பதற்றம் பரவி வருவதாகவும், இது தவறான தகவல் என தெரிவித்தார். மேலும், அவ்வாறு தனியார் பேருந்துகளை இயக்கப்படக்கூடிய பட்சத்தில் அதற்கான ஆலோசனை நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக மட்டுமே உலக வங்கி பரிந்துரையின் பேரில் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும், தனியார் பேருந்துகளுக்கான அரசாணை அதிமுக ஆட்சியில் போடப்பட்டதாகக் கூறிய அவர், உலக வங்கியின் கருத்து அடிப்படையிலேயே டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும், அறிக்கையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். அதேபோல், பேருந்து தனியார் மயமாகிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்ட அவர், ஏற்கனவே ஓடும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாது என்றும், பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பது தேவையற்ற வதந்தி என்றும் விளக்கம் அளித்தார்.
உலக வங்கியின் கருத்துகள் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் எனக் கூறிய அவர், மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பாதிக்கப்படாது, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும், அரசுப் பேருந்துகள் அரசு பேருந்துகளாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த ஆண்டும் புதிய பேருந்துகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகக் கூறிய அவர், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டை தங்கம்; தமிழக வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு!