சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்:இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், போக்குவரத்துக் கழகங்களுடன், ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.8) நடைபெற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இந்த நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு, நேற்று மாலையே போராட்டத்தை தொடங்கினர்.
பேருந்துகள் 100 சதவீதம் இயக்கம்:முதல் முதலாக திருவான்மியூா் மாநகரப் பேருந்து பணிமனையில், வேலைநிறுத்த அறிவிப்பு ஒட்டப்பட்டு, பேருந்துகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வழக்கமாக 2 ஆயிரத்து 25 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று (ஜன.9) 2 ஆயிரத்து 98 பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்இடிசி (SETC) பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டன.
அமைச்சர் ஆய்வு:வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரத்து 452 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று 8 ஆயிரத்து 787 பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் 92.96 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.