இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திமுகவின் தேர்தல் அறிக்கை எண்.486-ல், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியினை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், வாக்குறுதியில் உள்ள பத்து விழுக்காடு காலிப் பணியிடங்களைக் கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், காலிப்பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
இந்த நிலையில் சென்ற ஆண்டு தொகுதி 2 மற்றும் 2A பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்த முதல் நிலைத் தேர்வு எழுதிய பத்து இலட்சம் பேரில், ஒரு பதவிக்கு பத்து பேர் வீதம் 5,529 பதவிகளுக்கு, முன்னிலை மதிப்பெண் பெற்ற கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர்கள் பிரதானத் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து அதற்கான முடிவினையும் வெளியிட்டது.
இதன் அடிப்படையில், தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளையும், தாங்கள் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, தேர்வு முடிவுகளை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும், தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தும் பணியாளர் தேர்வு ஆணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கித் தேர்வுகளை நடத்தும் அமைப்புகள் ஆகியவை தேர்வு முடிவுகளை வெளியிடும்போதே, ஒவ்வொருவரும், ஒவ்வொரு பாடத்தில் பெற்ற மதிப்பெண்களையும் வெளியிடுவது வழக்கம்.