சமூக செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான திருநங்கை அப்சரா ரெட்டி, இவர் தொகுத்து வழங்கிய அப்சரா நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அரசியலில் அதீத ஈடுபாடு கொண்ட அப்சரா கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிரிந்தபோது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமமுகவில் பணியாற்றினார்.
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜன. 8ஆம் தேதி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். கட்சியில் சேர்ந்த உடனே அவருக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
அப்சரா ரெட்டி லண்டனில் படித்திருந்தாலும், ஒரு கட்சியைக் கூட விட்டுவைக்கவில்லை என்பதே நிதர்சனம். 2016ஆம் ஆண்டின் முதலில் பாஜகவில் இணைந்து அதே ஆண்டில் அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகை விட்டு அமமுக, பின்பு காங்கிரஸ் என ரவுண்டு அடித்து விட்டு தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுக கட்சியில் இணைத்து கொண்டுள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் அப்சரா ரெட்டி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜெயலலிதாவால் தான் எனக்கு அரசியலில் அடையாளம் கிடைத்தது. பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து அனுமதி வந்தபிறகு அதில் இணைந்தேன். ஆனால், பெண்களை காங்கிரஸ் நடத்தும் விதம் அதிருப்தியை தந்துள்ளது. அதனால், தற்போது அதிமுக-வில் இணைந்துள்ளேன். எல்லா மாநில பிரச்சினையும் அதிமுக நன்றாக கையாண்டுள்ளது. பெண்களை அதிக அளவில் அரசியலில் கொண்டு வரவேண்டும் என்பது தான் என் லட்சியம்" என்றார்.
முன்னதாக நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இணைந்த திருநங்கை அப்சரா ரெட்டி இதையும் படிங்க:வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக எம்எல்ஏ பூங்கோதை!