சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னையில் டிச.31ஆம் தேதி அன்று மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடும் நிலையில், எவ்வித அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காத வகையில் புத்தாண்டை கொண்டடுவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
அதில் காமராஜர் சாலை மற்றும் எலியட் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடற்கரை உட்புறச்சாலையில் 31.12.2023 அன்று இரவு 7 மணி முதல் 01.01.2024 அன்று காலை 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புறச் சாலையில் 31.12.2023 அன்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31.12.2023 இரவு 8 மணி முதல் 01.01.2024 காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும். அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாகச் செல்லலாம்.
டாக்டர் ஆர்.கே சாலையில் இருந்து காமராஜர் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையைs சென்றடையலாம்.
பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்குs செல்ல விரும்பும் வாகனங்கள், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாகச் சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை X விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை x நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை X டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை. தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.