சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையினை கருத்தில் கொண்டு, 6,670 வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது, “சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 03.12.2023 முதல் 08.12.2023 வரை, வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ஏஎன்பிஆர் (ANPR) கேமராக்கள் மூலம் மொத்தம் 6,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையினைக் கருத்தில் கொண்டு, இந்த ஒரு முறை மட்டும் 03.12.2023 முதல் 08.12.2023 வரையிலான தேதிகளில் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வேளச்சேரி கேஸ் பங்க் விபத்து; தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் தலைமறைவு.. போலீசார் தேடுதல் வேட்டை!