மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசிய ஆடியோ வைரல் சென்னை:புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளரான ராஜேந்திரன் என்பவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாட்ஸ்-அப் குரூப் ஒன்றில் கிறிஸ்டோபர் என்பவர் கிறிஸ்தவ பாடல் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதை கண்ட போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஆடியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.
அந்த ஆடியோவில், "சிறு தண்ணீரை மாற்றுத்திறனாளிகள் மீது தெளித்தவுடன் எழுந்து நடப்பார்கள் என பாடல் வரிகளில் உள்ளது. ஆனால் அது போன்று நடக்குமா?. எனவே இது போன்ற பாடலை எல்லாம் அனுப்பக்கூடாது. மேலும் இது இந்திய நாடு, ராம ஜென்ம பூமியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டி உள்ளோம். இந்தியாவில் உள்ளவர்கள் தான் பூஜை செய்வார்கள். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்போம், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் முடிந்தால் தடுத்து நிறுத்தி பாருங்கள். இங்கு முடியவில்லை என்றால் பாகிஸ்தான், சவுதி போன்ற நாடுகளில் சென்று படிங்கள். எங்களுக்கு பிடிக்குது நாங்கள் நடத்துகிறோம்.
இந்தியாவில் 80% இந்துக்கள், மற்ற 20% மட்டுமே முஸ்லீம், கிறிஸ்துவர்கள். யாரு மெஜாரிட்டியோ அவர்கள் தான் இந்தியாவை ஆளுவார்கள். ஆகையால் இது போன்ற பாடல்களை எல்லாம் பரப்பாதீர்கள், இங்கு ராம ராஜ்ஜியம் தான் நடக்கும்" என மதத்தை குறித்து அவதூறு பரப்புமாறு பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதைத் தொடர்ந்து, இந்த ஆடியோ தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, "கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நண்பர்கள் இருக்கின்ற வாட்ஸ் குரூப்பில் இந்த ஆடியோ பகிர்ந்ததாகவும், தனது நண்பர் போலீஸ் துறையில் இருந்து மத போதகராக மாறி இருந்து வருவதாகவும், அவர் அடிக்கடி இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பரப்புவார் எனவும் குறிப்பிட்டார்.
அதே போல சமீபத்தில் ரதயாத்திரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் அவர் பரப்பிய வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த ஆடியோவை பதிவிட்டதாகவும் தெரிவித்தார். அப்போது தனக்கும் தனது நண்பர் கிறிஸ்டோபருக்கும் நிறைய உரையாடல் நடந்ததாகவும், அதை சித்தரித்து சில ஆடியோவை மட்டும் சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் கிறிஸ்டோபருக்கும் தனக்கும் கடந்த மாதத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், அதை மனதில் வைத்து சித்தரித்து பரப்பி விட்டதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் துறை, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில், போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) N.M.மயில்வாகணன், தற்காலிக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி.பதவி - நாளைய விவாதத்தில் பங்கேற்கிறார்!