சென்னை:சென்னை தீவுத்திடல் பகுதியில் இரவு வேளையில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி ஆன் - ஸ்டிரீட் நைட் ஃபார்முலா 4 என்ற கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதற்காகத் தீவுத்திடல் மைதான தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, தீவுத்திடலை ஒட்டியுள்ள சாலைகளில் இன்று(நவ.17) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை பெருநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட அந்த செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக இந்தியாவில் முதல் முறையாகச் சென்னையில் ஆன்- ஸ்டிரீட் நைட் ஃபார்முலா 4 ரேஸ் சர்க்யூட் கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்தப் ஃபார்முலா 4 என்கின்ற இரவு நேர கார் பந்தயம் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடத்தப்பட உள்ளதையடுத்து, அப்பகுதியில் இருக்கக்கூடிய சாலைகள் அனைத்தும் பந்தய சுற்று சாலைகளாக உருவாக்கப்பட உள்ளது.
அதனால் இன்று(நவ.17) இரவு முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை இதற்காக சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.