சென்னை:தொடர்ச்சியாக சாலை விபத்து ஏற்படும் பகுதியில் திருஷ்டி கழிக்க திருநங்கைகளை வைத்து பூசணிக்காய் உடைக்க வைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரல் ஆன நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்தது காவல் துறை உத்தரவிட்டு உள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மதுரவாயல், வானகரம் ஆகிய சாலைகளில் தொடர்ச்சியாக சாலை விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, நேற்றைய முன்தினம் (ஜூன் 8) ஒரே நாளில் இரண்டு சாலை விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்வதால், அதனைத் தடுப்பதற்காக மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி பல வகைகளில் விபத்துகளை தடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், எந்த முயற்சியும் பலன் தராததால் புதிய முறைகளை கையாண்டுள்ளார்.
அந்த வகையில், திருநங்கை ஒருவரை காவல் துறையின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு விபத்து நடைபெறும் பகுதிகளில் கொண்டு சென்று பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவற்றை வைத்து திருஷ்டி கழிக்கும் பணியை செய்ய வைத்தனர். இதனையடுத்து, போக்குவரத்து காவல் துறையினரின் இந்த நூதன செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.