சென்னை: சென்னையில் வார விடுமுறை நாட்களில் கார் மற்றும் இரு சக்கர வாகன பந்தயங்கள் நடைபெற்று வந்தது. அதன் மூலம் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கார் மற்றும் இருசக்கர வாகன பந்தியத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் தடையை மீறி ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
ஆனாலும், அவ்வப்போது அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் கண்களில் மண்ணை தூவிவிட்டு சிலர் பைக் ரேஸில் ஈடுபடுவதும், அந்த வீடியோக்கள் இணையத்தில் பரவிய பிறகு அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், இன்று(மார்ச் 12) சிவானந்தா சாலையிலிருந்து நேப்பியர் பாலம் செல்லும் வழியில் லம்போக்கினி, பெராரி உள்ளிட்ட 8 சொகுசு கார்கள் அதிவேகமாக சீறி பாய்ந்து சென்றுள்ளது.
இதனைப் பார்த்த சிலர், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வைக்கும் அதிவேகமாக சொகுசு கார்கள் செல்வதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து போலீசார் நேப்பியர் பாலம் அருகே 8 சொகுசு கார்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.