சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் இரண்டாவது கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி வரை செல்லக்கூடிய வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக அடையாறு மேம்பாலமும், ராயப்பேட்டை மயிலாப்பூர் இணைக்கும் மேம்பாலமும் இடிக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதற்குப் போக்குவரத்து காவல்துறையினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் மெட்ரோ வழி தடத்தில் பணிகளை மேற்கொள்ளக்கூடிய எல்என்டி நிறுவனம் அதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளனர். ராயப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து மயிலாப்பூர் செல்லக்கூடிய வழித்தடத்தில் ஒரு பகுதியை இடிப்பதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் இடிக்கப்பட உள்ளதால் போக்குவரத்து போலீசார் அந்த பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர். அதன்படி, ராயப்பேட்டையில் இருந்து மயிலாப்பூர் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் அஜந்தா சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் சாலை வழியாக ராதாகிருஷ்ணன் சாலையைச் சென்றடைந்து, அங்கிருந்து யெல்லோ பேஜஸ் சந்திப்பிற்குச் சென்று மயிலாப்பூர் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.