சென்னையில் மின்சார ரயில்களைப் பொறுத்தவரைக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை மார்க்கமாகத் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புறநகர் மின்சார ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாகத் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று (அக் 31) ரத்து செய்யப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.
அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்கள் காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இன்று (அக் 31) மின்சார ரயில்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்குப் பொதுமக்கள் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.