சென்னை:சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கிமீ., 32.186 கிமீ, 21.097 கிமீ மற்றும் 10 கிமீ) பிரெஷ் வொர்க் மாரத்தான் ஓட்டம், சென்னை மாரத்தான் என்ற பெயரில் நாளை (ஜன.6) காலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இந்த சென்னை மாரத்தான் ஓட்டம், நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர், கே.கே.சாலை, இ.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைச் சென்றடைய உள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து காவல்துறையினர் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதில் அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க பாலம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம்போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம். போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும், வாகனங்கள் கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, வாலாஜா பாயிண்ட் அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கைச் சென்றடையலாம். ஆர்.கே சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், வி.எம் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். மத்திய கைலாஷ்-லிருந்து வரும் வாகனங்கள், பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்படமாட்டது.