சென்னை: கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் நேற்று (செப்.12) நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 33 தேர்வு மையங்களில் 17,992 பேர் தேர்வு எழுதினர். கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கடைசி நேரத்தில் 5 கி.மீ தூரம் வரை சென்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கீழ்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜான் பிரிட்டோ அதே பகுதியில் நடந்த நீட் தேர்வு மையம் அருகே போக்குவரத்து பணியில் ஈடுபட்டார். அப்போது வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் நீட் தேர்வு மையம் அருகே சென்றார். அங்கு பதட்டமாக மாணவ, மாணவிகள் இருந்தனர். இதனைக் கண்ட காவலர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். குறிப்பாக தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை சான்றிதழ் சரிபார்ப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டுதல் போன்ற உதவிகளை மாணவர்களுக்கு செய்தார். இதுமட்டுமின்றி பதற்றத்துடன் காணப்பட்ட மாணவ மாணவிகளுக்கு தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து பதற்றத்தை தணிக்க உதவி செய்தார்.