சென்னை: இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காலத்தில் நாடு முழுவதுமான வர்த்தகம் ரூ.3.5 லட்சம் கோடியும் தங்கம் மற்றும் வெள்ளி மட்டும் ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி உள்ளது என இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) நாடு முழுவதும் 30 நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை அமோகமாக இருப்பது, இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சிஏஐடி அறிக்கை வெளியிட்டது.
அதில், தீபாவளிக்காக மக்கள் தங்கம், வெள்ளி நகைகள், புதிய வாகனங்கள், புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள், மின்னணு சாதனங்கள், பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்கி குவித்து வருகின்றனர். தீபாவளியையொட்டி உணவு தானியங்கள், மளிகை பொருட்கள் விற்பனை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜவுளி விற்பனை 12 சதவீதம், தங்க நகைகள் விற்பனை 9 சதவீதம், உலர் பழங்கள் விற்பனை 4 சதவீதம், மின்னணு சாதனங்கள் விற்பனை 8 சதவீதம், பரிசு பொருட்கள் விற்பனை 8 சதவீதம், அழகுசாதன பொருட்கள் விற்பனை 6 சதவீதம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. ஆட்டோமொபைல்ஸ் துறையில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது.
மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை காரணமாகச் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தாலும் இந்தியாவில் மட்டும் தங்கத்திற்கான மவுசு குறைவதில்லை. இந்த ஆண்டு 41 டன் தங்க நகைகள், 400 டன் வெள்ளி நகைகள், பொருட்கள், நாணயங்கள் விற்பனையாகி உள்ளன. இதன்படி ஒரே நாளில் ரூ.30,000 கோடிக்குத் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீபாவளியை ஒட்டி ஆன்லைன் வணிகமும் கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. காற்று மாசு குறித்த பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு விற்பனை மட்டும் சரிவைச் சந்தித்து உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மொய்தீன் பாய் பொங்கலுக்கு வருகிறார்..! லால்சலாம் டீசருடன் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!