சென்னை:ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகை அரங்கத்தில் மத்திய மற்றும் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு தொடர்பாக வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விநியோகிஸ்தர்கள் மற்றும் வியாபாரிகளிடையே பிளாஸ்டிக் தடை மற்றும் அதன் மாற்று பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த கலந்தாலோசனை நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் இதில் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை மாசு கட்டுப்பாடு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் சங்கரன், பிளாஸ்டிக் கப் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் பால சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள்:
மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டோம். பிளாஸ்டிக் சீட் போன்ற பொருட்களில் சில பயன்பாட்டிற்கு தான் தடை உள்ளது. ஆனால் உற்பத்தி, விநியோகத்திற்கு தடை இல்லை. கேரி பைகளுக்கு மட்டும் தான் தடை. மற்ற பிளாஸ்டிக் பைகளுக்கு தடையில்லை என எடுத்துரைத்ததை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.