சென்னை: இதுகுறித்து திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம், அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும், இதுவரை இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன்றைய ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவர் சில கருத்துகளைச் சொன்னார். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை நான் அளித்தேன்.
இந்த நிலையில், 'திராவிடர்' குறித்து ஆளுநர் அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். 'திராவிடர்' என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600 ஆம் ஆண்டு என வைத்துக் கொண்டால், அதற்கு முன்னதாக 'திராவிடம்' என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா? இல்லை என்று ஆளுநர் சொல்கிறாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்?
புராணங்கள் கூறுவது என்ன? ஆரியர் - திராவிடர் என்ற சொற்கள் எல்லாம் எப்போது உருவானது என்பது குறித்து மிகப்பெரிய வரலாற்றாசிரியர்கள் பல நூறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். அது குறித்து ஒன்றிரண்டு புத்தகங்களை மேலோட்டமாக ஆளுநர் வாசித்தாலே ஆரியர் - திராவிடர் என்ற உண்மையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
அசல்மனு தரும சாஸ்திரத்தின் பத்தாவது அத்தியாயத்தின் 33 ஆவது சூத்திரம் என்ன சொல்கிறது என்றால், ''பெளண்ட்ரகாஷ் செளட்ர த்ரவிடா காம்போஜாயவநா ஷகா பாரதா பஹ்ளவாஷ் சீநா கிராதா தரதா கஷா'' என்கிறது. இத்தேசத்தை ஆட்சி செய்தவர்கள் அனைவரும் சூத்திரனாய் விட்டார்கள் என்கிறது, மனுசாஸ்திரம். மகாபாரதத்தில் 'திராவிடம்' வருகிறது. காஞ்சிபுராணத்தில் 'திராவிடம்' இருக்கிறது.
தாயுமானவர் 'திராவிடம்' சொல்கிறார். தஸ்யூக்கள், அடிமைகள், திராவிடர்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிறார், டாக்டர் அம்பேத்கர். இத்தகைய இந்தியச் சமூக வரலாற்றின் சாதாரண செய்திகளை கூட அறிந்து கொள்ளாமல், ஆங்கிலேயர்கள் வந்து தான் 'திராவிடர்கள்' என்று பிரித்தார்கள் என்று சொல்வது வரலாறு அறியாதவர் கூற்று. அல்லது வரலாற்றை மறைப்பவர்களின் கூற்று ஆகும்.