தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

K Annamalai: முதல்வரை தொடர்ந்து டி.ஆர்.பாலுவும் அவதூறு வழக்கு.. அண்ணாமலைக்கு புதிய சிக்கல்! - Saidapet Court

திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு
அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு

By

Published : May 12, 2023, 1:16 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை அவர் வெளியிட்டார். அது மட்டுமல்லாமல் திமுக தலைவர்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அண்ணாமலை முன் வைத்தார்.

இதனையடுத்து, அண்ணாமலைக்கு திமுக தரப்பில் இருந்து பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை சந்திக்கத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அந்த வழக்கு 8 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக எம்பியும், மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை இன்று (மே 12) காலை தாக்கல் செய்துள்ளார்.

இதில், "கடந்த 1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும், மரியாதையும் உள்ளது.

அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தி உள்ளார். திமுகவினர் ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாகவும் பொய்யாக குற்றம் சாட்டி உள்ளார். நானும், தொழில்துறை அமைச்சராக இருக்கும் என் மகன் டிஆர்பி ராஜாவும் மட்டுமே பொது வாழ்வில் உள்ளோம்.

மற்றபடி என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஆனால், நாங்கள் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை.

பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இது தவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது, மூத்த வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். மேலும், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதே விவகாரத்தில் ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நமக்கு நாமே திட்டம்: பட்டியலின, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் பங்களிப்பு குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details