சென்னை:கரோனா தொற்று நோய் தடுப்பூசி தயாராகிவரும் நிலையில் நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசி போடுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (டிச. 04) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான விலை அதிகமாக உள்ளதுடன் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, பரிசோதனை எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கவும் செலவைக் குறைக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, பரிசோதனை செலவை மிகவும் குறைப்பதுடன் மாநிலங்களுக்கு நிதி உதவியும் அளிக்க வேண்டும்.
தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பலகட்ட சோதனைகளைக் கடந்து பயன்பாட்டுக்கு விரைவில் வெளிவர இருக்கும் நிலையில், நாம் எவ்வித தாமதத்துக்கும் இடம் தராமல், இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும்.
உலகளவில் பல்வேறு நாடுகளில் 161 தடுப்பூசி வகைகள் தயாரிப்பு வெவ்வேறு நிலைகளில் உள்ளன. 55 தடுப்பூசி வகைகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டுள்ள நிலையை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் இரண்டு தடுப்பூசி மருந்துகள் இந்தியாவைச் சேர்ந்தவை. மத்திய அரசும் பிரதமரும் இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பாராட்டுக்குரியவர்கள்.
இதற்கிடையில் புகழ்பெற்ற சர்வதேச மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் உருவாக்கி உள்ள கரோனா தொற்று தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்து உள்ளது. இவற்றைப் பதப்படுத்துவது நமது நாட்டிற்கு ஏற்ற முறையில் இல்லை. மேலும், அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், புனே சீரம் இன்ஸ்டிடியூட் உருவாக்கி உள்ள கரோனா தொற்று தடுப்பூசி அரசுக்கு மூன்று டாலர் விலைக்கும், தனியார் நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இம்மருந்து இரண்டு முதல் எட்டு டிகிரி அளவில் சேமித்து வைக்கப்பட முடியும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் சரியாக இருக்குமானால் இந்தியத் தயாரிப்பான இந்தத் தடுப்பூசி நமது நாட்டின் சூழலுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்தியாவிலும் குறைந்தபட்சம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போல 3 டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும். இதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகளுடன் பொதுத் துறை நிறுவனங்களும் இணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் சட்டப்பூர்வமாக ஒதுக்க வேண்டிய நிறுவன சமுதாய பொறுப்பு நிதியை 2021-2022ஆம் ஆண்டுகளில் முற்றிலும் தடுப்பூசி மருந்துக்குப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், டெல்லியில் பல நாள்களாக உறையவைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெட்ட வெளியில் ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் போராடிவருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய ஆவனசெய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, பிரதமர் விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினார். இவரது இந்தக் கருத்திற்கு நாடாளுமன்ற துறை அமைச்சர் ஆட்சேபம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்தியாவில் கரோனா தொற்றுக்கு நிவாரண தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு, மருந்து தயாராகிவரும் நிறுவனங்களுக்கு அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு ஊக்குவித்து பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: அறவழியில் போராடிவரும் விவசாயிகளுக்குத் தோழமையைத் தெரிவிக்கிறோம் - மம்தா பானர்ஜி