சென்னை: திமுகவில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ஜுலை 14ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று (ஜூலை 14) ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சைதாப்பேட்டை 17 ஆவது பெருநகர நீதிமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திமுகவின் சொத்துப் பட்டியலை வெளியிட்டதால் ஆளும் கட்சியில் பல பேருக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. திமுகவின் முதலமைச்சரை விட பல்வேறு தரப்பினர் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கின்றனர். இன்று டி.ஆர்.பாலு தொடுத்த அவதூறு வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்தேன்.
பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்குச் சென்று இருக்கிறது. குறிப்பாக நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறது. டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணத்தில் பல பொய்களை கூறியுள்ளார். அவர் 2004 முதல் 2009 வரை ஊழல் அதிகமாக செய்ததால் தான் அன்றைய அமைச்சர் அவையில் இடம்பெறவில்லை என்று 2014 மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அழகிரி கூறியுள்ளார். டி.ஆர்.பாலு எவ்வாறு ஊழல் செய்தார், எத்தனை கப்பல் வைத்துள்ளார், அதன் மூலம் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்று எல்லாம் தெரியும் என்று அழகிரி கூறியுள்ளார்.
அதற்கு டி.ஆர்.பாலு, அழகிரி மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் தொடரவில்லை. இது 2008-ல் தனியார் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி. அப்போது பெட்ரோலியத் துறை மத்திய அமைச்சரிடம் கிங்ஸ் கெமிக்கல் நிறுவனத்திற்கு ஜெயில் நிறுவனத்தின் மூலம் கேஸ் கேட்டதாகவும் தனது பதவியை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனை நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு ஒப்புக்கொண்டதாகவும் அதனையும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்போதைய அதிமுக எம்.பி. மைத்ரேயன் கேள்விக்கு டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.