’பப்ஜி’ விளையாட்டை ஆபாசமாகப் பேசி யூ-டியூபில் ஒளிபரப்பு செய்துவந்தவர் மதன். தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் குறித்து தகாத வார்த்தையால் பேசி பதிவிட்டுவந்த மதன் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழந்தன. குறிப்பாக மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புளியந்தோப்பு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் இரண்டு புகார்கள் வந்தன.
மதனுக்கு அழைப்பாணை
அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மதனை நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பினர். ஆனால் மதன் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மதன் விபிஎன் சர்வரைப் பயன்படுத்தி செல்போன் உபயோகிப்பதால் காவல் துறையினர் மதனை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உதவியுடன் தலைமறைவு
பப்ஜி மதன் மீது மேலும் ஒரு புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினருக்கு வந்துள்ளது. புளியந்தோப்பு சைபர் கிரைம், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இணைந்து மதனைத் தீவிரமாக தேடிவருகின்றனர். மதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
ஏராளமான புகார்கள்
பப்ஜி மதனுக்கு எதிராக ஏராளமான ஆன்லைன் புகார்கள் வரத் தொடங்கியுள்ளது. இதுவரை 159 ஆன்லைன் புகார்கள் அவர் மீது வந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. அந்த புகார்களை அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் சைபர் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பப்ஜி மதன் மீது தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், வழக்கு சிபிசிஐடி சைபர் கிரைமிற்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மனைவி கிருத்திகாவிடம் விசாரணை
யூ-ட்யூபர் மதனை நெருங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பெருங்களத்தூரில் உள்ள மதனின் தந்தை மாணிக்கம் (78), அண்ணன், சேலம் மாவட்டத்திலுள்ள 8 மாத கைக்குழந்தையுடன் அவரின் மனைவி கிருத்திகா ஆகியோரை சைபர் கிரைம் காவல் துறையினர் சென்னைக்கு அழைத்து சென்று காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற காவல்
அதில், மதனின் யூ-டியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவி கிருத்திகா செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் மதனின் வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவிடுவது கிருத்திகா தான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதனுக்கு உடந்தையாக இருந்ததாக, அவரது மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் வரும் 30ஆம் தேதி வரை கிருத்திகாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவரை பாதுகாப்புடன் காவல் துறையினர் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: யூ-டியூபர் மதனை நெருங்குகிறதா போலீஸ்?