தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tomorrow
Tomorrow

By

Published : Nov 20, 2022, 4:45 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று (நவ.19) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (நவ.20) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ஆம் தேதி, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 22ஆம் தேதி வரை, ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழ்நாடு - புதுச்சேரி கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் - வரும் 21, 22 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details