தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேசன் கடைக்கு வந்த தக்காளி - 1 மணி நேரத்தில் காலியானதால் மக்கள் ஏமாற்றம்

சென்னையில் இன்று (ஜுலை 4) முதல் 82 நியாயவிலைக் கடைகளில் தக்காளி ரூ.60க்கு விற்பனை தொடங்கிய நிலையில், ஒரு மணி நேரத்தில் தக்காளி விற்பனையானதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tomato sales start at ration shops in tamilnadu people disappointed as sale over within 1 hour
நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை துவக்கம் - 1 மணி நேரத்தில் காலியானதால் மக்கள் ஏமாற்றம்

By

Published : Jul 4, 2023, 12:24 PM IST

Updated : Jul 4, 2023, 1:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 130 ரூபாய்க்கும், கொடைக்கானலில் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளியின் வரத்து மழையின் காரணமாக குறைந்தது. இதனால், தக்காளியின் விளைச்சல் இல்லாமல் வரத்து குறைந்ததன் காரணமாகவே விலை கிடுகிடுவென உயர்ந்தது.

அன்றாட சமையல் பொருட்களில் முக்கியமாகக் கருதப்படும் காய்கறி, தக்காளி. விலை உயர்வினால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், தக்காளியின் விலையைக் குறைப்பதற்கு அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், தமிழ்நாட்டில் உள்ள 65 பசுமைப் பண்ணைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டது. பசுமை பண்ணை காய்கறி அங்காடி, நடமாடும் காய்கறி அங்காடி மூலமாக கொள்முதல் விலைக்கே விற்க திட்டம் எனவும் தக்காளியைப் பதுக்கி வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்து இருந்தார்.

கடந்த மாதம் 27ஆம் தேதி கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட 62 இடங்களில் செயல்படும் பண்ணை பசுமைக் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தக்காளியின் வரத்து அதிகரித்து விலைக் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் மேலும் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய அரசு முடிவு எடுத்தது. இதனை அடுத்து இன்று (ஜூலை4) முதல் சென்னையில் நியாய விலைக் கடைகளில் தக்காளி ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதில், வடசென்னையில் 32 கடைகளிலும் மத்திய சென்னையில் 25 கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் முதல் கட்டமாக தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நியாய விலைக்கடை மற்றும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் உட்பட 110 கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி வீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தக்காளி வாங்குவதற்கு ரேஷன் அட்டை தேவையில்லை என்றும்; கடையில் பில் வாங்கிக் கொண்டு தக்காளி வாங்கிக் கொள்ளலாம் என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு கடைக்கு 50 முதல் 100 கிலோ கொள்முதல் செய்யப்படுவதால் ஒரு மணி நேரத்தில் தக்காளி விற்பனையானது. இதனால், பொதுமக்கள் அனைவருக்கும் தக்காளி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நியாய விலைக் கடைகளில் தக்காளி கொள்முதலை உயர்த்தக் கோரியும், நியாய விலைக் கடைகளில் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரியும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Last Updated : Jul 4, 2023, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details