சென்னை: சென்னையில் தக்காளியின் விலை கடந்த மூன்று நாள்களாக வெகுவாக உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மழை தொடர்ந்தால் தக்காளியின் விலை மேலும் உயரலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "வழக்கமாக மழைக் காலங்களில் வெங்காயத்தின் விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு தக்காளியின் விலை ஏறுமுகமாக உள்ளது" என்றனர்.
தக்காளி விலை கிடு கிடு உயர்வு
கோயம்பேடு வியாபாரிகள் சங்க ஆலோசகர் வி.ஆர் சௌந்தரராஜன் கூறுகையில், "ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி அதிக அளவில் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும். னினும் இந்த ஆண்டு கடும் மழைப்பொழிவினால் வரத்து போதுமானதாக இல்லை.
ஒரு நாளைக்கு 70 முதல் 80 லாரி தக்காளி கோயம்பேடுக்கு வந்து சேரும். ஆனால் தற்போது 30 முதல் 35 லாரிகள் மட்டுமே வருகிறது. வெண்டைக்காய், பாகற்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலையும் ் ஏறிக்கொண்டே செல்கிறது.
விலை குறைய வாய்ப்பு
இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு முன் விலை குறைய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் விவசாயிகள் இரண்டாம் பருவ விளைச்சலை தொடங்குவார்கள். இதனால் காய்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றார்.
மொத்த வியாபாரிகளிடம் தக்காளியை 140 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகள், நுகர்வோருக்கு 150 முதல் 160 வரை விற்பனை செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை தொடரும் நிலையில், காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Rajini calls on Kamal: கமலிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்