சென்னை: கொளத்தூர் தொகுதியில், அனிதா அச்சீவர்ஸ் அக்காடமி சார்பில் இன்று (04.04.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகள் மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ''சாதனைகளை சொன்னால், நேரம் போதாது. உண்மைதான். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான். அதற்காகத்தான் சொல்லுகிறோம், இது ஒரு திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு எத்தனையோ நற்சான்றிதழ்கள் ஊடகங்களாக இருந்தாலும் பத்திரிகைகளாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து வரக்கூடிய ஆங்கிலப் பத்திரிகைகளாக இருந்தாலும், நம்முடைய ஆட்சியை இன்றைக்குப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள், வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பல முறை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்; இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருவதற்கான எல்லா முயற்சிகளையும் நான் எடுப்பேன் என்று ஆட்சி பொறுப்பேற்ற அன்றே குறிப்பிட்டுச்சொன்னேன். தேர்தல் முடிந்து, தேர்தல் முடிவுகள் எல்லாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறபோது, பெரும்பான்மை இடங்களில் நாம் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது.
நம்முடைய கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றுகளை நான் வந்து வாங்கிக்கொண்டு நேராக நம்மை ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவினுடைய நினைவிடத்திற்கும்; நம்முடைய உயிரோடு கலந்து இருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கும் சென்று, அங்கே வணக்கம் செலுத்திவிட்டு, மரியாதை செய்துவிட்டு, வெளியிலே வருகிறபோது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு,
''ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள், என்ன சொல்லப் போகிறீர்கள்?'' என்று என்னைக் கேட்டபோது நான் குறிப்பிட்டுச் சொன்னேன். மகிழ்ச்சி அடைகிறேன், வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன்.
அதோடு நிறுத்தவில்லை, வாக்களித்தவர்கள் பெருமைப்படத்தக்க வகையில், அவர்கள் என்னைப் பாராட்டக்கூடிய வகையிலே ஆட்சியை நடத்துவது மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்காமல் நாம் இருந்துவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும் என்று அப்போதே நான் குறிப்பிட்டுச்சொன்னேன். அதைத்தான் திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இன்றைக்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவிலேயே நம்பர் ஒன் சி.எம்., என்று அந்தப் பாராட்டை நான் பெற்றிருந்தாலும் அப்போதும் நான் சொன்னேன், நம்பர் ஒன் சி.எம்., என்று சொல்வதைவிட 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலை உருவாக வேண்டும் என்று நான் சொன்னேன், அது வந்திருக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது'' என பெருமையுடன் தெரிவித்தார்.
'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலையில்தான் இன்றைய ஆட்சி நடக்கிறது - முதலமைச்சர் பெருமிதம் - TN CM MK Stalin
'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்லக்கூடிய நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Todays govt is running in a position where we can say 'Number One Tamil Nadu says TN CM MKS