ஐதராபாத் : இன்று சர்வதேச பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. அன்றாட உணவு வகைகள் எத்தனையோ இருந்தாலும் பெரும்பாலான மக்களின் விருப்ப உணவுப் பட்டியலில் பிரியாணிக்கு என தனிக் இடம் இருக்கும். உலகம் முழுவதும் பிரியாணிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது ஈரான் என அழைக்கப்படும் முந்தைய பெர்சிய நாட்டின் உணவான பிரியாணி, என்றாலே அனைவரின் நாக்கிலும் ருசி நடனமாடும். நாட்டின் தேசிய உணவு என்பது போல பிரியாணி அனைவராலும் கருதப்படுகிறது. பெர்சிய நாட்டின் வணிகர்களால் அரேபியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த பிரியாணி படையெடுத்து சென்றதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களால் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. என்ன தான் பெர்சியா நாட்டில் இருந்து பிரியாணி உணவு மற்ற நாடுகளுக்கு பரவியதாக கூறப்பட்டாலும், தற்போது நாம் சாப்பிடும் பிரியாணி வகைகள் முற்றிலும் உள்நாட்டில் அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டவை.
பொதுவாக பிரியாணி சீரக சம்பா, பாஸ்மதி, சோனா மசூரி, பாட்னா ரைஸ், உள்ளிட்ட 5 அரிசி வகைகளில் தயார் செய்யப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரியாணி போடுவது என்பது தற்போதைய கலாசாரமாக மாறி வருகிறது. அந்த வகையில் பிரியாணிக்கு மக்கள் அடிமையாகிவிட்டார்கள் என்றே கூறலாம்.
உலகளவில் பார்க்கையில்.. ஏன் பிரியாணி உருவான இடமான ஈரானை காட்டிலும் இந்தியாவிலேயே அதிகளவில் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 80க்கும் பிரியாணி வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சீரக சம்பா பிரியாணி, லக்னோவி அல்லது அவாதி பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, சிந்தி பிரியாணி, மெமோனி பிரியா, மலபார் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி என அதன் எண்ணிக்கையை கூறிக் கொண்டே போகலாம்.
பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வகையாக பிரியாணி தயார் செய்யப்பட்டாலும், சில வகை பிரியாணிகளை மக்கள் இன்னும் ருசிக்க தவறி வருகின்றனர் என்றே கூறலாம். ஆனால் அதற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஆன்லைன் உணவு டெலிவிரி முறை வந்ததும் மக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து கொண்டே வித.. விதமான.. கம.. கம.. என மணக்கும் பிரியாணிகளை ஆர்டர் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் ஏறத்தாழ 26 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் பிரியாணி விற்பனையில் ஈடுபட்டு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.