சென்னை: மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் நாளை மறுநாள் (ஜூன் 5) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் மற்றும் ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.