சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாகம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்ச் அலர்ட்' (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழையானது மாலை 6 மணி முதலே தொடங்கியது. குறிப்பாக சென்னையில் உள்ள சென்னை சென்ட்ரல், தி.நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அடையாறு, ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோகநகர், வடபழனி, கோடம்பாக்கம், கே.கே.நகர், எழும்பூர், அண்ணாசாலை, பாரிமுனை, சேப்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
இதேபோல, சென்னை வடக்கு புறநகர் பகுதிகளான எண்ணூர், அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், முடிச்சூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும் கன மழையானது பெய்தது.
போக்குவரத்து நெரிசல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (டிச.2) காலையில் தொடர் மழை பெய்ததால், ஜிஎஸ்டி சாலை, உள் வட்டசாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி, நெடுஞ்சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாலை நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்கள்.