சென்னை: பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 897 மாணவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 812 பேர் தங்கள் ஆவணங்களை முழுமையாகச் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களையும், புதிதாகச் சேர விரும்பும் மாணவர்கள் அனைத்துச் சான்றிதழ்களையும் பதிவேற்ற இன்றே கடைசி நாளாகும். பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26 முதல் இன்றுவரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
இந்தநிலையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
பொறியியல் படிப்பில் சேர ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை வரையில் பொறியியல் கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 896 மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர். மேலும், கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 732 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 812 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.