இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் மருத்துவம் சேர விருப்பம் மாணவர்கள் டிசம்பர் 2ஆம் தேதிமுதல் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11.50 மணிவரை இணையதளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி அதிகளவில் விண்ணப்பித்தனர். ஆனால், பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து எழுந்த புகாரை அடுத்து, தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை ஜனவரி 6ஆம் தேதி (இன்று) இரவு 11.50 வரை நீட்டித்து அறிவித்தது. மேலும், ஜனவரி 7ஆம் தேதிவரை அதற்கான கட்டணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளது.
ஆகையால், நீட் தேர்வு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் ஜனவரி 15ஆம் தேதிமுதல் 31ஆம் தேதிவரை அவற்றில் திருத்தம் செய்துகொள்ளலாம்.