ஐதராபாத் :இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. வட்டம் ஒரு மையப் புள்ளியில் தொடங்குகிறது என்பார்கள். அதன்படி உலகில் இருக்கும் கோடிக்கணக்கான அறிஞர்கள், தத்துவ மேதைகள், சாதனையாளர்கள் மையப் புள்ளி ஒரு ஆசிரியர் என்றால் அது மிகையல்ல.
யாரும் சென்றிராத நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3ஐ தரையிறக்கி சர்வதேச அரங்கில் இந்தியாவை திரும்பி பார்க்கச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் விளையாட்டு அரங்கில் 5 முறைக்கு மேல் உலக சாமிபியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சனையும் தண்ணீர் குடிக்க வைத்த இளம் சிறுவன் பிரஞ்ஞானந்தாவை உருவாக்கியதும் ஒரு ஆசிரியர் தான்.
அப்படி எந்தவித பலனையும் எதிர்பாராமல் பல அறிஞர்களையும், பன்முகத் தன்மை கொண்டவர்களையும் உருவாக்க உழைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களை கொண்டாட ஒருநாள் போதும் என்றால் அது நிச்சயம் பொருந்ததாது. ஆசிரியர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் மெழுகு தன்னை வருத்திக் கொண்டு ஒளியை வழங்குவது போல் ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாட்களை மாணாக்கர்களுக்காகவே செலவிட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்த சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவு கூறும் நாளாக இன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிறோம்.
1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணியில் பிறந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தனது இளமை காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர், சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார்.