சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜூன்.16) வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் மேலும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 66 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 10 ஆயிரத்து 446 பேருக்கும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 10 ஆயிரத்து 448 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை இரண்டு கோடியே 96 லட்சத்து 94 ஆயிரத்து 650 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 23 லட்சத்து 88 ஆயிரத்து 746 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைபடுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 355 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 21 ஆயிரத்து 58 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 106 பேரும், அரசு மருத்துவமனையில் 164 பேரும் என 270 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோயம்புத்தூரில் ஆயிரத்து 420 நபர்களும், ஈரோட்டில் ஆயிரத்து 123 நபர்களும், சென்னையில் 689 நபர்களும், சேலத்தில் 693 நபர்களும், திருப்பூரில் 608 நபர்களும் புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையில் கோயம்புத்தூரில் 14 ஆயிரத்து 396 பேர் உள்ளனர். ஈரோட்டில் ஒன்பதாயிரத்து 962 நபர்களும், சேலத்தில் ஆறாயிரத்து மூன்று நபர்களும், சென்னையில் ஆறாயிரத்து 531 நபர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.