சென்னை:சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர், பிரபல ரவுடி மேத்யூ. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த சில வருடங்களாக மனைவி மற்றும் குழந்தையுடன் எந்த ஒரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் முறையாக நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டிலிருந்தபோது 5 பேர் கொண்ட தனிப்படை காவல் துறையினர், துப்பாக்கி முனையில் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பாக அவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மது போதையில் கூவம் ஆற்றில் இறங்கிய நபர் பத்திரமாக மீட்பு:சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு மாநகர் மயிலை ரயில் நிலையம் எதிரே உள்ள கூவம் ஆற்றில், ஒருவர் மது போதையில் ஆற்றின் உள்ளே இறங்கி, எதிரே உள்ள தரையில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் அங்கேயே இருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த நபரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொக்கரபாளையம் நாவலூரைச் சேர்ந்த அமோஷ் (50) என தெரிய வந்துள்ளது.
மேலும், அவர் சென்னையில் மந்தைவெளி ரயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்பவர் என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் இருப்பதால், இது போன்று நடந்து கொண்டார் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, விசாரணை முடிந்த பின்பு அந்த நபரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
3 வயது குழந்தையை பள்ளி நிர்வாகம் தாக்கியதாக புகார்:வேளச்சேரியில் உள்ள தம்பதியினரின் 3 வயது குழந்தை, அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். குழந்தை வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில், மதியம் 2.30 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வர உறவினர் பள்ளிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது குழந்தை அழுது கொண்டே தலையில் வீங்கிய நிலையில் ரத்தக் காயத்துடன் வந்துள்ளது. இதனைக் கண்ட குழந்தையின் உறவினர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, சரிவர பதிலளிக்காமல் குழந்தைக்கு அடிபட்டதே தெரியாது எனவும், குழந்தை அடிபட்ட தகவலை பெற்றோருக்கு சொல்லாமலும் மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பள்ளி நிர்வாகத்தினர்தான் குழந்தையைத் தாக்கி காயம் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என பள்ளி முதல்வர், அவரது வழக்கறிஞர் மகள், வகுப்பு ஆசிரியர்கள், குழந்தை பராமரிக்கும் நபர் உள்ளிட்ட அனைவரின் மீதும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், வேளச்சேரி காவல்துறையினர் பள்ளி முதல்வர் உள்பட ஆசிரியர்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து குழந்தையின் உறவினர் கூறுகையில், “இரு தினங்களுக்கு முன்பு குழந்தையின் காலில் பேண்ட் ஏய்டு ஒட்டி அனுப்பியிருந்தனர். அதுகுறித்து ஏன் என பள்ளி நிர்வாகம் குறிப்பிடவில்லை எனக் கேட்டதை மனதில் வைத்துக் கொண்டு, நேற்று காலை 11 மணிக்கு பெற்றோரை அழைத்துப் பேசி குழந்தையை எங்கள் பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு, வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என பள்ளி முதல்வர் கூறியதாகவும், மாலை குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதால் பள்ளி நிர்வாகத்தினர்தான் குழந்தையைத் தாக்கி காயம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உத்தரகாசி சுரங்க விபத்து - அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!