சென்னை: தாம்பரம், சோமங்கலம் பேருந்து நிலையம் அருகே தகுந்த கல்வித்தகுதி இல்லாமல் சம்பத் என்பவர் என்சி ஹெல்த் கேர் என்ற பெயரில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் கோபிநாத்துக்கு இது குறித்து புகார்கள் வந்துள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில், நேற்று மருத்துவக் குழுவுடன் சோமங்கலத்தில் உள்ள என் சி ஹெல்த்கேர் மையத்தில் சோதனை செய்துள்ளனர். பின்னர் இது குறித்து சம்பத்திடம் விசாரணை மேற்கொண்டபோது, தகுந்த மருத்துவம் படிக்காமல் ஹோமியோபதி மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் சம்பத்திடம் மருத்துவம் படித்ததற்கான முறையான சான்றிதழ் இல்லாததால், அவரை அழைத்துச் சென்று சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சோமங்கலம் போலீசார் சம்பத் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11 வயது சிறுமி தற்கொலை:ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி - ஏகவல்லி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்களது மகள் ஆர்.கே சாலையில் உள்ள தனியார் மகளிர் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கதவு வெகுநேரமாகியும் திறக்காத காரணத்தினால் சிறுமியின் சகோதரர் கதவைத் தட்டி உள்ளார். ஆனாலும் கதவு திறக்கவில்லை என்ற காரணத்தினால், அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் தந்தை மற்றும் சித்தி கூறுகையில், "நன்றாக படிக்கின்ற மாணவி. அக்கம்பக்கத்தில் யார் என்ன வேலை சொன்னாலும் உடனடியாக செய்து முடிப்பார். நான்கு முறை விளையாட்டுப் போட்டிகளில் மெடல் வாங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.