சென்னை:திருட்டு வழக்கில் கைதான இளைஞர் சிறையில் இருக்கும் நிலையில் அவரை மற்றொரு வழக்குக்காக மூன்று ஆண்டுகளாகத் தேடி வந்த சென்னை அரும்பாக்கம் போலீசார்..!
சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வீடு ஒன்றில் ஆறரை லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் விக்னேஷை அப்போதே சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலைய போலீசார் மற்றொரு திருட்டு வழக்கில் கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இது குறித்த தகவல் அரும்பாக்கம் போலீசாருக்கு தெரியாததால் தொடர்ந்து விக்னேஷை மூன்று ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இத்தகைய சூழலில் சிறைத்துறை நிர்வாகம் கைதிகளின் கைரேகையை சில தினங்களுக்கு முன்பு கணினியில் புதுப்பித்துள்ளனர் அப்போதுதான் விக்னேஷ் ஏற்கனவே சிறையில் இருப்பது சென்னை அரும்பாக்க போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதை அடுத்து அரும்பாக்கம் போலீசார் புழல் சிறைக்குச் சென்று விக்னேஷை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்து தலைமறைவான நபர்களைக் கைது செய்ய வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்...
சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் ஏசியன் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த கணேஷ் குமார், செந்தில் குமார் ஆகிய சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தீபாவளி சீட்டு பிடித்துள்ளனர். இதை அடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களிடம் ரூ.2500 வீதம் மாதம் மாதம் கட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட நபர்கள் இருவரையும் பிடித்து தங்கள் பணத்தை மீட்டுத் தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இருவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும் இரண்டு நபர்களையும் போலீசார் பிடிக்காமல் உள்ளனர் உடனடியாக இருவரையும் கைது செய்து தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்து அவர்களை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.