இந்தியாவில் நிலப்பத்திரங்கள், எந்த அளவிற்குக் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, சண்முகம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ பல்வேறு கேள்விகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு எழுப்பியுள்ளார். அதில் ,
'(அ) இந்திய நிலப்பதிவு ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டம் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் வரையிலும், எத்தனை விழுக்காடு நிறைவு பெற்று இருக்கின்றது?
(ஆ) இந்தத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.
(இ) இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் போதுமானதாக இருந்ததா?' எனப்பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள விளக்கம் அளித்துள்ளார். அதில்,
'(அ) 2020 ஜனவரி 1ஆம் நாள் நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 6 இலட்சத்து 55 ஆயிரத்து 959 கிராமங்களில், 5 இலட்சத்து 91 ஆயிரத்து 221 கிராமங்களில் நிலப்பத்திரங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு விட்டன. 90 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தியா முழுமையும், 1 கோடியே 23 இலட்சத்து 94 ஆயிரத்து 956 நில வரைபடங்கள் உள்ளன. அவற்றுள், 66 இலட்சத்து 60 ஆயிரத்து 226 வரைபடங்கள் (54 விழுக்காடு) கணினி மயம் ஆக்கப்பட்டுவிட்டன. நாடு முழுமையும் உள்ள 5 ஆயிரத்து155 பத்திரப்பதிவு அலுவலகங்களில், 4 ஆயிரத்து 479 அலுவலகங்களில், பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயம் ஆக்கப்பட்டு உள்ளன. இதன் விழுக்காடு 87.
(ஆ) இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில், கலக்கம், எரிச்சல் ஏற்படுத்துகின்ற, உணர்வுகளின் அடிப்படையிலான பிரச்னைகள் எழுகின்றன. ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து கணினி மயமாக்குவது, காலத்தை விழுங்கும் பெரும்பணி. ஏனைய திட்டங்களைப் போல் அல்லாமல், இந்தத் திட்டம் கருக்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள், கூறுகளை ஆக்கும் பணிகள் முழுமை அடைவதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கின்றது.
இந்தப் பணிகளை, கீழ்காணும் இதர பணிகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும்.
1. மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.
2. அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு, திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
எனினும், போதுமான அளவு அடிப்படையான பணிகளை நிறைவு செய்து இருக்கின்றோம். உரிமைகளின் பதிவிற்காக, ஆவணங்களைக் கணினிமயம் ஆக்குதல், பத்திரப்பதிவு அலுவலகங்கள் மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்துகின்ற பணிகள் பெரும்பகுதி நிறைவு பெற்றுள்ளன.