திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து பேசிய அசுரன் படத்தைப் பாராட்டியதையடுத்து, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் அமைந்துள்ளது என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தின் பட்டாவை வெளியிட்டு, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என திமுக நிரூபித்துவிட்டால் ராமதாஸ்அரசியலை விட்டு விலகத் தயாரா என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே பாஜகவின் மாநிலச் செயலர் சீனிவாசன், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் இது தொடர்பாக விசாரிக்க புகாரளித்தார். அதன்படி, கடந்த நவ.19ஆம் தேதி முரசொலி நிர்வாக இயக்குநரான உதயநிதி ஸ்டாலினை ஆணையத்தின் முன் ஆஜராகி ஆவணங்களைச் சமர்பிக்க உத்தரவிlப்பட்டது. உத்தரவின்படி, முரசொலி அறக்கட்டளை அறங்காவலரான ஆர்.எஸ். பாரதி நேரில் ஆஜரானார். ஆனால், புகாரளித்தவரான சீனிவாசன் ஆதாரங்களைச் சமர்பிக்க கால அவகாசம் கேட்டார்.