சென்னை:ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்த நிலையில், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை.
இதனால் நேற்று (ஜன.08) இரவு 12 மணி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை துவங்கின. சில பணிமனைகளில் தொலைதூரம் செல்ல வேண்டிய பேருந்துகள் முன்னதாகவே இயக்கப்படாமல், பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று காலை முதல் (6 மணி நிலவரப்படி) அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஒவ்வொரு மண்டலங்களிலும் இயக்கப்படும் பேருந்துகளின் விகிதம் குறித்து காணலாம்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வழக்கமாக 2 ஆயிரத்து 25 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று 2 ஆயிரத்து 98 பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்இடிசி பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை (73.58), கடலூர் (72.67), விழுப்புரம் (87.83), கள்ளக்குறிச்சி (83.78), வேலூர் (73.33), ராணிப்பேட்டை (68.06), திருப்பத்தூர் (72.97), திருவள்ளூர் (80.80), காஞ்சிபுரம் (71.29), செங்கல்பட்டு (72.62) மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் போக்குவரத்து மண்டலத்தில் வழக்கமாக 1,292 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று 993 பேருந்துகள் என சராசரியாக 76.50 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சேலம் (100), நாமக்கல் (100), தருமபுரி (88.57), கிருஷ்ணகிரி (93.65) ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் போக்குவரத்து மண்டலத்தில் வழக்கமாக 399 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று 387 பேருந்துகள் என சராசரியாக 96.99 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோயம்புத்தூர் (100), நீலகிரி (78.79), ஈரோடு (91.79), திருப்பூர் (92.40) ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோயம்புத்தூர் போக்குவரத்து மண்டலத்தில் வழக்கமாக 1,218 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று 1,163 பேருந்துகள் என சராசரியாக 95.48 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தஞ்சாவூர் (71.68), நாகப்பட்டினர் (78.26), மயிலாடுதுறை (98.57), திருவாரூர் (94.59), திருச்சி (68.69), அரியலூர் (95.65), பெரம்பலூர் (92.11), ராமநாதபுரம் (77.69), சிவகங்கை (91.09), புதுக்கோட்டை (91.75), கரூர் (90.40) ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கும்பகோணம் போக்குவரத்து மண்டலத்தில் வழக்கமாக 1,927 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று 1599 பேருந்துகள் என சராசரியாக 82.98 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
மதுரை (96.12), திண்டுக்கல் (98.34), தேனி (98.43), விருதுநகர் (98.30) மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை போக்குவரத்து மண்டலத்தில் வழக்கமாக 1,468 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று 1,430 பேருந்துகள் என சராசரியாக 97.41 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருநெல்வேலி (100), தென்காசி (101.91), கன்னியாகுமரி (100), தூத்துக்குடி (98.67) ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்தில் வழக்கமாக 1,107 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்றும் 1,107 பேருந்துகள் என 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரத்து 452 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று 8 ஆயிரத்து 787 பேருந்துகள் என வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் 92.96 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பகலில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்.. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!