சென்னை:தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (செப்.25) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண், சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பான 2008-ன் விதிகளை மீறி சுங்கச்சாவடி உரிமையாளர்கள் செயல்படுவதாகவும், சுங்கசாவடியை கடக்கும் அரசு பேருந்துகளை முழு கட்டணம் செலுத்த நிர்பந்திப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயம் என விதிகளில் உள்ளதாகவும் அவர் வாதிட்டார். ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்பதால் தற்போது சுங்க கட்டணம் வசூலிக்க முடியாது என தெரிவித்தார்.
மத்திய அரசின் சாலை போக்குவரத்து கழக சட்டம் 1950-ன் கீழ், அரசு பேருந்து போக்குவரத்து என்பது வணிக ரீதியான போக்குவரத்து இல்லை என்றும் ஏழை, அடித்தட்டு மக்களுக்கு, கிராம புற மக்களுக்கும் சேவையை வழங்கி வருகிறது என்றும் அவர் வாதிட்டார். எனவே சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்த படி அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூல் நடைமுறையில் இருந்து விதி விலக்கு அளிக்க முடியாது என்றும், அந்தந்த சுங்க சாவடி கட்டணங்களை அரசு பேருந்துகள் செலுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பு வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டிக்கெட்டில் பெயர் மாற்றம்.. விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு.. பயணி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!