சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையின் முன்னோடிகளால் மாணவர்கள் நேரடியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தமிழ் இதழியல் உலகில் வளர்ந்து வரும் புதிய துறைகளில் ஆழ்ந்த அலசலுடன் எழுத இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முயற்சியை எடுத்திருக்கிறது.
ஊடகவியலுக்குத் தேவையான வலுவான அடிப்படைத் திறன்களை இந்தப் படிப்பு தருகிறது. கோட்பாடுகளையும் களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. கட்டணமில்லா இந்தப் படிப்பில், வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம் பெறுகின்றன.
திறன்மிக்க ஊடகவியலாளர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய ஊடகப் பிரிவைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படுவார்கள். பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் பண்பாடு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளை மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.