சென்னை:மூத்த தமிழறிஞர் இளங்குமரனார் மதுரையில் உள்ள அவரது வீட்டில் முதுமை காரணமாக நேற்றிரவு (ஜூலை 25) இயற்கை எய்தினார். மூத்தத் தமிழறிஞரும் தமிழ் ஆசிரியருமான இளங்குமரனார், தமிழ் மொழிக்கு ஆற்றிய பெரும் தொண்டின் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழ் இலக்கியம் தொடர்பாக 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி சாதனை படைத்தவர். தமிழ்நாட்டின் மூத்த மொழியறிஞர், ஆய்வறிஞர், தமிழிய வரலாற்று வரைவாய்வாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்க செயற்பாட்டாளர் உள்ளிட்ட பன்முகங்களுக்கு சொந்தக்காரர்.
தமுஎகச இரங்கல்
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி திட்டத்தில் மொழியறிஞராக செயலாற்றிய அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.
திருக்குறளுக்கு பேருரை எழுதியவர். காணாமல் போய்விட்டது எனக் கருதப்பட்ட தமிழ் இலக்கண நூலாம் காக்கை பாடினியத்தை கண்டுபிடித்து பதிப்பித்தவர். தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுகொண்ட அவர், தேவநேயப் பாவாளரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளை தொகுத்தவர்.
அதேபோன்று செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் 14 தொகுதிகளைக் கொணர்ந்தவர். சமஸ்கிருதச் சடங்குகளை மறுத்து குரள் வழியில் தமிழ் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை தமிழில் நடத்துவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்தவர். அவருடைய தனித்துவமான ஆய்வுகள் அவருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் தமிழ் ஆய்வுலகத்திற்கும் தமுஎகச சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராக தன்னுடைய கல்விப்பணியை துவங்கிய அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் கொடுத்து கவுரவிக்கப்பட்டவர். ஒரு பல்கலைக்கழகம் செய்யக்கூடிய அளவுக்கான பணியை தன்னுடைய தனி மனித உழைப்பால் செய்து முடித்தவர்.
தமிழ் இலக்கியம், இலக்கணம், ஆய்வு என பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் 14 தொகுதிகள் நூலை உருவாக்கியவர். தமிழ் இலக்கணத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட அவர், தமிழ் இலக்கண வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்!