இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,:
கரோனா நோய்த்தொற்றால் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. அதேபோன்று நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிட நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை வரும் ஜூன் 1 முதல் நடத்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது என்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் சுமார் 12 லட்சம் மாணவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் அந்தக் குழந்தைகள் தற்போது பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லாதபோது, அவர்கள் மீது திடீரென பொதுத்தேர்வைத் திணிப்பது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது ஒரு மாணவன் தனது வாழ்நாளில் சந்திக்கும் முதல் அரசு பொதுத்தேர்வாகும். பொதுவாக ஆண்டுதோறும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பு ஜனவரி மாதம் தொடங்கி மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு, இரண்டாம் திருப்புதல் தேர்வு, இறுதித் திருப்புதல் தேர்வு எனப் பல கட்டத் தேர்வுகள் நடத்தி அவர்களை பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மன நிலைக்கு கொண்டுவருவது வழக்கம்.
ஆனால், தற்போது கரோனாவின் பாதிப்பு ஒரு பக்கம், அதே நேரத்தில் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களைப் பார்த்தே இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட சூழல் ஒரு பக்கம், இத்தகு இக்கட்டான சூழலில் மாணவர்களது மனநிலை என்பது பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்பதைத் மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
ஊரடங்கு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கிய பின்பு, கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு, மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் குறைந்தது 15 நாட்களாவது மீண்டும் பயிற்சி பெற்ற பின்பே பொதுத் தேர்வை நடத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பார்க்க: Cyclone Amphan: ஆறு மணிநேரத்தில் அதிதீவிரமாக மாறும் ஆம்பன் புயல்!